இந்தியா

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி அணி ஆவணங்களை ஒப்படைத்தது- 2501 பேர் ஆதரவு கடிதம் அளித்தனர்

Published On 2023-02-06 17:42 IST   |   Update On 2023-02-06 17:42:00 IST
  • அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்பதால் தென்னரசுக்கு ஆதரவாக 2,501 பேர் கையெழுத்து.
  • ஓ.பி.எஸ். அணியினர் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அ.தி.மு.க. சார்பில் அங்கு தென்னரசு போயிடுவார் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதையடுத்து தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து அவசரம் அவசரமாக 2,750 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொதுக்குழு தொடர்பான படிவங்கள் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் வழங்கப்பட்டன.

இந்த படிவங்களை பூர்த்தி செய்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை கழகத்தில் நேரில் வழங்கினார்கள்.

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் மாவட்டம் வாரியாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டு உறுதி மொழி பத்திரத்திலும் கையெழுத்திட்டு வழங்கினார்கள்.

நேற்று இரவு 7 மணி வரையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அமர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆதரவு கடிதங்களை பெற்றார்.

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்பதால் தென்னரசுக்கு ஆதரவாக 2,501 பேர் கையெழுத்து போட்டு தங்களது ஆதரவு கடிதத்தை வழங்கி உள்ளனர்.

இந்த கடிதங்களுடன் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று காலை 10.05 மணி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். 2,501 பேரின் ஆதரவு கடிதங்களை 2 சூட்கேஸ்களில் வைத்து அவர் எடுத்துச்சென்றார்.

டெல்லியில் அனைத்து ஆதரவு கடிதங்களையும் தேர்தல் ஆணையத்தில் தமிழ் மகன் உசேன் இன்று மதியம் சமர்ப்பித்தார். இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சி.வி.சண்முகம் எம்.பி., அ.தி.மு.க. வக்கீல் இன்பதுரை ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழ்மகன் உசேன் முறையாக செயல்படுத்தவில்லை என்று ஓ.பி.எஸ். அணி குற்றம்சாட்டியிருப்பது இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னரசுவின் பெயர் மட்டுமே படிவத்தில் இடம் பெற்றிருந்தது ஒருதலைபட்சமானது என்று கூறியுள்ள ஓ.பி.எஸ். அணியினர், எங்கள் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனின் பெயரை ஏன் சேர்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

ஓ.பி.எஸ். அணியினர் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக அவர்களும் தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இரட்டை இலை சின்னத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமோ? என்கிற ஐயம் எழுந்துள்ளது. இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து இரட்டை இலை சின்னத்துக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் தீர்ந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு எளிதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் சின்னம் கிடைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓ.பி.எஸ். அணியினர் போட்டுள்ள திடீர் முட்டுக்கட்டையால் எடப்பாடிபழனிசாமி அணியினர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ். அணியினரின் எதிர்ப்பால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News