இந்தியா

கேரளாவில் ஓணம் விழாவில் நடனம் ஆடிய கலெக்டர்

Published On 2023-08-27 04:15 GMT   |   Update On 2023-08-27 04:16 GMT
  • பண்டிகையை கேரள அரசு 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது.
  • பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன. அப்போது ஓணம் பாடல்கள் இசைக்கப்பட்டன.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. அறுவடை திருநாள் எனப்படும் இந்த பண்டிகையை கேரள அரசு 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் (கடந்த 20-ந்தேதி) ஓணம் பண்டிகை தொடங்கியது. வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் விருந்து படைத்து மக்கள் மகிழ்வார்கள்.

பண்டிகை தொடங்கிய நாள் முதல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஓணம் திருவிழாவை பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் வீடுகள், அலுவலகங்களில் அத்தப்பூ கோலமிட்டு பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன. அப்போது ஓணம் பாடல்கள் இசைக்கப்பட்டன.

விழாவில் பங்கேற்ற கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்சனா பர்வீன், ஓணம் பாடலை கேட்டு உற்சாகம் அடைந்தார். அத்துடன் நில்லாமல் அவர், சேலையை வரிந்து கட்டிக்கொண்டு மேடையில் அசத்தல் நடனமும் ஆடினார். அவரை கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். பண்டிகை அனைவருக்கும் சமமானது என்பதை உணர்த்தும் வகையில் அவரது ஆட்டம் அமைந்தது.

இந்தநிலையில் கலெக்டர் நடனம் ஆடிய வீடியோ, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் கலெக்டர் அப்சனா பர்வீனை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News