இந்தியா

கேரளாவில் 21,500 பறவைகளை அழிக்கும் பணி தொடக்கம்- இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை

Published On 2024-04-19 06:22 GMT   |   Update On 2024-04-19 06:55 GMT
  • ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்க்கீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
  • பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்து மற்றும் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் உள்ள பண்ணையில் வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்தன. இதனால் பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என்று கருதப்பட்டது. இதையடுத்து இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வாத்துக்களுக்கு ஏவியான் இன்புளூ வன்சா என்ற பறவை காய்ச்சல் தொற்று பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்க்கீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதில் எடத்துவா பஞ்சாயத்து முதலாவது வார்டில் பறவை காய்ச்சல் தொற்று பாதித்திருந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்து உள்ளிட்ட பறவை இனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

அதில் தொற்று பாதித்த பகுதிக்கு அருகே 21,537 பறவைகள் வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பறவைகளை கொன்று எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பறவைகளை கொல்லும் பணியை சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று தொடங்கினர்.

பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பறவை காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கோழி, வாத்து, காடை போன்ற நாட்டு பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 25-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News