இந்தியா

எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி- விமான போக்குவரத்து அமைச்சர் ஜே சிந்தியா தகவல்

Published On 2022-09-21 04:31 GMT   |   Update On 2022-09-21 04:32 GMT
  • ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகளை கவனிக்க சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் பணியாற்றி வருகிறோம்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,100 நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்படத் தொடங்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக, நேற்று நடைபெற்ற 49வது தேசிய மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் சிந்தியா மேலும் கூறியதாவது:-

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ்கள் செயல்படத் தொடங்கும். அதன் முன்மொழிவுக்கான கோரிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் அழைக்கப்படும். இதனால் விலைமதிப்பற்ற நேரத்தையும் உயிர்களையும் காப்பாற்ற ஹெலிகாப்டர்கள் சேவைக்கு ஒதுக்கப்படும்.

ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவைகளை கவனிக்க சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் பணியாற்றி வருகிறோம். சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எங்களிடம் உள்ள 'பொன்னான நேரம்', நெடுஞ்சாலைகளில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கும் அல்லது முதல் மையத்திற்கும் விரைவாக அழைத்து செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தில் அமைச்சகம் பகிர்ந்து கொண்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தற்போது 49 ஏர் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளதாகவும், இவை 19 ஆபரேட்டர்களால் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,100 நோயாளிகள் ஏர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News