இந்தியா

தேர்தல் பிரசாரத்தில் தெலுங்கு தேசம் வேட்பாளர் கார் கண்ணாடிகள் உடைப்பு

Published On 2024-03-23 10:58 IST   |   Update On 2024-03-23 10:58:00 IST
  • பா.ஜ.க., மற்றும் ஜனசேனா கட்சியினருடன் சேர்ந்து பிரசாரம்.
  • போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லா சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் ஜோர்லகண்டா பிரம்மா ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார்.

இவர் அந்த தொகுதி முழுவதும் பா.ஜ.க., மற்றும் ஜனசேனா கட்சியினருடன் சேர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று மாலை ஜங்க மகேஸ்வரம் என்ற கிராமத்தில் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் அவர்களது வாகனங்களை மறித்தனர். இந்த கிராமத்திற்குள் நீங்கள் வாக்கு சேகரிக்க செல்லக்கூடாது என கூறினர்.

இதனால் பிரசாரத்திற்கு வந்த தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினருக்கும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பிரசார வாகனங்கள் மீது தாக்கினர்.

இதில் வேட்பாளரின் வாகனத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Tags:    

Similar News