இந்தியா

வயநாடு தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி பயந்து ஓடுவார்

Published On 2024-04-20 08:05 GMT   |   Update On 2024-04-20 08:05 GMT
  • பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.
  • முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது.

மும்பை:

பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி அளவில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் கிடைத்த தகவல்களின்படி, முதல் கட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது. காங்கிரஸ் ஏற்கனவே தனது தோல்வியை ஒப்பு கொண்டு விட்டது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி சரிந்து விழும். அந்த கூட்டணியே இருக்காது. அக்கூட்டணி கட்சிகள் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்கிறார்கள். ராகுல் காந்திக்கும், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. 25 சதவீத தொகுதிகளில் இந்திய கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகிறார்கள்.

எதிர்க்கட்சி கூட்டணி என்பது தங்கள் ஊழல் செயல்களை பாதுகாக்க ஒன்றிணைந்த சுயநலவாதிகள் குழு.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் சிலர் மேல்-சபை தேர்தல் மூலம் பாராளுமன்றத்தில் நுழைய பார்க்கிறார்கள்.


தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் பயந்து ஓடுகிறார்கள். சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாததால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து வெளியேறி மேல்சபை தேர்தலுக்கு சென்றனர்.

இந்தியா கூட்டணியின் தலைவர் யார்? என்பதை அவர்களால் மக்களுக்கு சொல்ல முடியாது. காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) அமேதி தொகுதியில் இருந்து ஓடினார். தற்போது வயநாடு தொகுதியில் இருந்தும் ஓடிவிடுவார்.

வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்திக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அவரும், அவரது குழுவினரும் 26-ந்தேதி வயநாட்டு தொகுதியில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக காத்திருக்கிறார்கள். அமேதியில் இருந்து தப்பி ஓடியது போல அவர்கள் வயநாட்டை விட்டு ஓடுவார்கள்.

அமேதியில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி வயநாட்டையும் இழக்க நேரிடும். எனவே அவர் ஏப்ரல் 26-ந்தேதிக்கு பிறகு பாதுகாப்பான இடத்தை தேட வேண்டும்.

காங்கிரஸ் செய்த தவறுகளை சரி செய்வதற்காகவே எங்களின் அதிக நேரம் செலவழிக்கப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகள் உலகில் இந்தியாவின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஆண்டாக இருக்கும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியுரிமை திருத்த சட்டம் இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கியர்களின் கதி என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News