இந்தியா

கேரளாவில் பருவமழை தொடங்கிய நிலையில் 3678 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

Published On 2023-06-19 09:38 IST   |   Update On 2023-06-19 10:47:00 IST
  • இந்த ஆண்டு கேரளாவில் 66 பேர் எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர்.
  • மாநிலம் முழுவதும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்கவும், சுகாதாரமான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக கடந்த 8-ந்தேதி தொடங்கியது.

பருவமழை தொடங்கியதுமே மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில சுகாதாரதுறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலும் சேகரிக்கப்பட்டது.

இதில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 377 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதிக்கப்பட்டோரில் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 3678 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மாநில சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டு கேரளாவில் 66 பேர் எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளனர். இதில் 22 பேர் எலி காய்ச்சலால் பலியானது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்கவும், சுகாதாரமான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News