இந்தியா

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: ஷிண்டே தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும்- உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

Published On 2023-05-12 03:00 GMT   |   Update On 2023-05-12 03:00 GMT
  • ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர்.
  • சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

மும்பை :

மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனாவின் கொறடாவாக அங்கீகரித்தது சட்டவிரோதம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். தீர்ப்பு தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர். நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது சட்டப்படி தவறாக இருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில் நான் பதவியை ராஜினாமா செய்தேன். துரோகிகளை வைத்து நான் எப்படி ஆட்சி நடத்த முடியும்?. தற்போது உள்ள முதல்-மந்திரி (ஏக்நாத் ஷிண்டே), துணை முதல்-மந்திரி (தேவேந்திர பட்னாவிஸ்) ஆகியோர் அறநெறி இருந்தால், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை அடுத்து ராஜினாமா செய்ய வேண்டும்.

சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் ஷிண்டே அணியை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனா கொறடாவாக நியமித்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்பளித்து உள்ளது, எனவே 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க முடிவில் சுனில் பிரபுவை சிவசேனா கொறடாவாக ராகுல் நர்வேக்கர் கருத வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News