இந்தியா

சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Published On 2025-04-25 13:51 IST   |   Update On 2025-04-25 13:51:00 IST
  • சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது.
  • சுதந்திரமாகக் கடமையைச் செய்ய தடையாக இருப்பதாகத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீதான அவதூறான நடவடிக்கைகள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக சுதந்திரமாகக் கடமையைச் செய்ய தடையாக இருப்பதாகத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது பேசிய நீதிபதிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது. இந்த முறை சாவர்க்கர், அடுத்த முறை மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் ஊழியர் என்று யாராவது கூறுவார்கள். மகாத்மா காந்திகூட ஆங்கிலேயர்களைத் தொடர்புகொண்டபோது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்று குறிப்பிட்டது, ராகுல் காந்திக்கு தெரியுமா?

அடுத்த முறை இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டால், நாங்கள் தானாகவே நடவடிக்கை எடுப்போம் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர். இருப்பினும் ராகுல் காந்தி மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் சிறையில் வாடியிருந்தபோது, சாவர்க்கர் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதாகவும், முஸ்லிம் நபர் ஒருவரை சாவர்க்கர் தாக்கியதாக சாவர்க்கரின் புத்தகத்திலேயே குறிப்பிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார் என பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News