தலித் ஐ.பி.எஸ் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. மேலும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை - பரபரப்பு கடிதம்
- தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
- பூரன் குமார் தனது ஊழலைக் மறைக்க சாதி அரசியலைக் கையிலெடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் ஒய். பூரன் குமார் ஐபிஎஸ். ரோதக் சரக ஐ.ஜியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் போலீஸ் மையத்தின் ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே கடந்த வாரம் செவாய்க்கிழமை, புரன் குமார் சண்டிகரில் உள்ள வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய கடிதத்தில் சில உயர் அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். தலித் சமூகத்தை சேர்ந்த பூரன் குமார் காவல்துறையில் நிலவிய சாதிய பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பூரன் குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மேலும் ஒரு திடீர் திருப்பமாக, அந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்த உதவி துணை ஆய்வாளர் (ஏ.எஸ்.ஐ.) சந்தீப் குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
ரோஹ்தக் சைபர் செல்லில் ஏ.எஸ்.ஐ-ஆக பணிபுரிந்த சந்தீப் குமார், தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன், அவர் மூன்று பக்க கடிதம் மற்றும் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "உண்மைக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறேன். நேர்மையின் பக்கம் நின்றதில் நான் பெருமை கொள்கிறேன். தேசத்தை விழிப்படையச் செய்ய இது தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரி பூரன் குமார் ஒரு ஊழல்வாதி என்றும், தனது ஊழல் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சந்தீப் குமார் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு மதுபான ஒப்பந்ததாரரிடம் இருந்து பூரன் குமாரின் காவலர் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது தான் பிடித்ததாகவும், இந்த விவகாரம் வெளியானபோது, பூரன் குமார் தனது ஊழலைக் மறைக்க சாதி அரசியலைக் கையிலெடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தீப் குமார் தனது வீடியோ செய்தியில், பூரன் குமார் ரோஹ்தக் ரேஞ்சில் பொறுப்பேற்ற பிறகு நேர்மையான அதிகாரிகளைப் புறக்கணித்து, ஊழல்வாதிகளை நியமித்ததாகக் குற்றம் சாட்டினார். அவர்கள் வழக்குப் பதிவேடுகளை முடக்குவது, பாதிக்கப்பட்டவர்களை அழைத்துப் பணத்திற்காக மனதளவில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இடமாற்றங்களுக்காக சில பெண் காவலர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இந்த விவகாரம் சாதி தொடர்பானதல்ல, முழுக்க முழுக்க ஊழல் தொடர்பானது என்றும் சந்தீப் குமார் பேசியுள்ளார்.