இந்தியா

அக்டோபரில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - தேர்தல் ஆணையம் முடிவு?

Published On 2025-09-11 00:51 IST   |   Update On 2025-09-11 00:51:00 IST
  • வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சுமார் மூன்றரை மணி நேரம் விளக்கக்காட்சி திரையிடப்பட்டது.
  • இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், போலி பெயர்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள்.

பீகாரில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து விவாதிக்க நேற்று (புதன்கிழமை) டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

நாள் முழுவதும் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சுமார் மூன்றரை மணி நேரம் விளக்கக்காட்சி திரையிடப்பட்டது.

மேலும் வாக்காளர் பட்டியல் திருத்த செயல்முறை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கு முன்பு அதன் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும், அதற்குத் தயாராகுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

செப்டம்பர் மாதத்திற்குள் அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடையும் என்றும், அக்டோபரில் செயல்முறை தொடங்கும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த திருத்தத்தில், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், போலி பெயர்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள்.

இந்த காரணங்களை காட்டி, பீகாரில் ஏற்கனவே நடந்து முடிந்த SIR திருத்தத்தில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தேர்தல் ஆணையம் பாஜகவுக்காக வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இனியும் அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News