டெல்லியின் அடுத்த முதல்வர்.. பதவியேற்பு விழா நடக்கும் தேதி - வெளியான முக்கிய தகவல்
- டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்றது.
- டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்தது.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முதலமைச்சர் ஆக பதவியேற்க போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வருகிற வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. முதல்வரோடு எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலும், டெல்லியின் அடுத்த முதல்வர் பதவியேற்பு குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.