சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. மக்களவையில் பாஜக அமளி - ஓம் பிர்லா அதிருப்தி
- சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும்
- ஒரு மூத்த தலைவர் அவையின் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா நிறைவேறியது.
இதற்கிடையே நேற்று நடந்த காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி வக்பு மசோதா குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசியதாவது, வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சோனியா காந்தியின் பேச்சு இன்று மக்களவை கூட்டத்திலும் கடுமையாக எதிரொலித்துள்ளது. சோனியா காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஓம் பிர்லா, "இவ்வளவு விரிவான விவாதம் மற்றும் விதிகளின்படி முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டபோதிலும், ஒரு மூத்த தலைவர் அவையின் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படுவது இல்லை" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சோனியா காந்தி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும் என பாஜக எம்.பிக்கள் இன்று மக்களவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதன்பின் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.