இந்தியா

சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளார் - அவரது மகனின் பேச்சால் பரபரப்பு

Published On 2025-10-22 18:04 IST   |   Update On 2025-10-22 18:04:00 IST
  • சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
  • சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார்

கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நவம்பரில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய சித்தராமையா, "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார். இது கர்நாடகா அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News