இந்தியா

சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கும் பெற்றோர்

Published On 2025-07-12 08:56 IST   |   Update On 2025-07-12 08:56:00 IST
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, அங்கே இருந்தவாறே தனது குடும்பத்தினருடன் பேசினார்.
  • விண்வெளியில் இருந்து பூமியையும், பிரபஞ்சத்தையும் பார்ப்பது எவ்வளவு அழகானது? என சுபான்ஷு எங்களுக்கு தெரிவித்தார்.

லக்னோ:

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் கடந்த மாதம் 25-ந்தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா அங்கே பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவரது இந்த பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார். அவர் பாதுகாப்பாக பூமியில் காலடி வைப்பதை இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, அங்கே இருந்தவாறே தனது குடும்பத்தினருடன் பேசினார். இது அவரது பெற்றோரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர்கள் சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது சுபான்ஷுவின் தந்தை ஷம்பு தயால் சுக்லா கூறியதாவது:-

விண்வெளியில் அனைத்தும் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த திட்டம் நன்றாக நடைபெறுவதை பார்க்கும்போது சிறப்பாக உள்ளது.

விண்வெளி நிலையத்தில் அவர் பணி செய்வதை எங்களுக்கு காட்டினார். அதாவது பணி செய்யும் இடம், தூங்கும் இடம், அவரது ஆய்வுக்கூடம், தினசரி பணிகள் போன்றவற்றை எங்களுக்கு காட்டினார். ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கினார்.

சுபான்ஷு, தான் செய்யும் பணியில் மிகுந்த ஈடுபாடுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். மகிழ்ச்சியாக செய்யும் எந்தவொரு செயலும் எப்போதும் சிறப்பாக இருக்கும்.

அவரிடம் பேசியபிறகு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாங்களும் இங்கே நன்றாக இருக்கிறோம். அவர் பூமிக்கு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். எங்கள் மொத்த குடும்பமும், உறவினர்களும் அவருக்காக காத்திருக்கிறோம்.

இந்த பயணத்துக்காகவும், அவர் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை அறியும்போது எங்கள் குடும்பம் மிகுந்த பெருமையடைகிறது.

இவ்வாறு ஷம்பு தயால் சர்மா கூறினார்.

சுபான்ஷுவின் தாய் ஆஷா கூறியதாவது:-

விண்வெளியில் இருந்து பூமியையும், பிரபஞ்சத்தையும் பார்ப்பது எவ்வளவு அழகானது? என சுபான்ஷு எங்களுக்கு தெரிவித்தார். விண்வெளி நிலையத்தின் புகைப்படங்களையும் எங்களுக்கு காட்டினார்.

அதையெல்லாம் பார்ப்பது மனதுக்கு இதமாக இருந்தது. அதைவிட எங்கள் மகன் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருப்பதைப் பார்ப்பது இன்னும் சிறப்பாக இருந்தது.

அவரது வருகைக்காக நாங்கள் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வானிலை மற்றும் பிற சூழல்களை பொறுத்தே அவரது பயணம் இருக்கும். ஆனால் எப்போது திரும்பினாலும் அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு ஆஷா கூறினார்.

மகனை வரவேற்க என்னென்ன ஏற்பாடுகள் நடந்து வருகின்றன? என்ற கேள்விக்கு அவர், 'அவருக்காக என்ன வேண்டுமானாலும் சமைப்பேன். வெளிநாட்டில் இருந்ததால் கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக சாப்பிடாத அனைத்தையும் இந்த முறை சாப்பிட விரும்புவதாக அவர் எங்களிடம் கூறினார். தனக்குப் பிடித்தமான வீட்டில் சமைத்த உணவுகளை எல்லாம் ருசிக்க விரும்புவதாக அவர் கூறினார்' என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

Tags:    

Similar News