பேராசைக்கு எல்லை வேண்டும்: ஷிண்டே மீது சிவசேனா எம்.பி. தாக்கு
- சிவசேனா அவ்வளவு எளிதாக காணாமல் போய்விடும் என யாரும் நினைக்க வேண்டாம்.
- நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இதுவரை சிவசேனா எனக்கு கொடுத்து உள்ளது.
மும்பை
சிவசேனாவில் நேற்று 12 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவினர். இந்தநிலையில் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக உள்ள பர்பானி எம்.பி. சஞ்சய் ஜாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இதுவரை சிவசேனா எனக்கு கொடுத்து உள்ளது. நான் உத்தவ் தாக்கரேவுடன் உறுதியாக நிற்கிறேன். சிவசேனா அவ்வளவு எளிதாக காணாமல் போய்விடும் என யாரும் நினைக்க வேண்டாம். தற்போது சிவசேனாவில் நிலவும் பிரச்சினை காணாமல் போகும். 1984-ல் பா.ஜனதாவுக்கு 2 எம்.பி.க்கள் மட்டும் இருந்தனர். ஆனால் இன்று அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். எனவே பால் தாக்கரேவின் சிவசேனா அவ்வளவு எளிதாக உடைந்துவிடும் என யாரும் நினைக்காதீர்கள்.
ஒருவரின் பேராசைக்கு எல்லை வேண்டும். இந்த சிவசேனா தான் எங்களை பெரிய அரசியல்வாதியாக உருவாக்கியது. பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது. சிலருக்கு நேற்று வரை நல்லதாக இருந்த கட்சி தற்போது மோசமானது போல தெரிகிறது. ஏக்நாத் ஷிண்டேவின் நோக்கம் நிறைவேறினால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என நினைக்கிறேன்.
சில பிரச்சினைக்கு நானும் உத்தவ் தாக்கரேவிடம் ராஜினாமாவை கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர் உடனடியாக அந்த பிரச்சினையை தீர்ப்பார். இதனால் ராஜினாமாவை திரும்ப பெற்று இருக்கிறேன். பர்பானியில் சிவசேனா நிர்வாகிகளுக்கு நியாயமானதை உத்தவ் தாக்கரே செய்து உள்ளார்.
என்னை போல ஏக்நாத் ஷிண்டேவும் உத்தவ் தாக்கரேயை சந்திப்பார். சிவசேனாவை தாக்க வேண்டும் என சந்தர்ப்பவாதிகள் (பா.ஜனதா) ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்ந்து உள்ளனர். ஒருநாள் அவர்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராகவே ஒருவரை பயன்படுத்தும் காலம் வரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.