ஷோரூமிலேயே பூஜை: எலுமிச்சையால் நசுங்கிய கார் - வைரல் வீடியோ
- மஹிந்திரா தார் சாலையில் தலைப்புற கவிழ்ந்து கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாம் விருப்பப்பட்ட மாடலில் புதிய காரை வாங்கி பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அவ்வாறு காரை வாங்கி முதலில் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்ய வேண்டும் என நினைப்போம். அப்படி நினைத்த ஒருவருக்கு நிகழ்ந்த அனுபவத்தை குறித்து பார்ப்போம்.
டெல்லியின் நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில், மாணி பவார் என்ற பெண் புதிதாக மஹிந்திரா தாரை முன்பதிவு செய்து இருந்தார். இதனை நேற்று முன்தினம் மாலை பூஜை செய்து எடுத்து செல்ல ஷோரூமுக்கு வந்திருந்தார். அப்போது, அங்கு பூஜைகளும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணி பவார் காரின் 4 பக்க சக்கரத்தின் அடியிலும் எலுமிச்சை பழத்தை வைத்துள்ளார். இதையடுத்து காரில் அமர்ந்து லேசாக தள்ளி எலுமிச்சை பழத்தை நசுக்கினார். அப்போது அவருடன் ஷோரூம் ஊழியரான விகாஸ் என்பவரும் காரில் அமர்ந்திருந்தார். இதையடுத்து எலுமிச்சை பழத்தை நசுக்கியதும் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டார்.
அவ்வளவுதான், கார் ஷோரூமின் முதல் மாடியின் கண்ணாடியை உடைத்து வெளியே பறந்து வந்து விழுந்தது. இதையடுத்து, ஷோரூமில் இருந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்த காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினர்.
இதனிடையே மஹிந்திரா தார் சாலையில் தலைப்புற கவிழ்ந்து கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.