'ஐ லவ் யூ' சொல்வது பாலியல் வன்கொடுமை அல்ல- போக்சோ வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
- குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
- விசாரணை நிறைவில், வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த 2015-ம் ஆண்டு பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 17 வயது சிறுமியை 35 வயது வாலிபர் ஒருவர் கையை பிடித்து 'ஐ லவ் யூ' சொன்னதாக தெரிகிறது. வீட்டுக்கு சென்ற சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நாக்பூர் செசன்ஸ் கோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் நாக்பூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மனுவை நீதிபதி ஊர்மிளா ஜோஷி விசாரித்து வந்தார். விசாரணை நிறைவில், வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இது தொடர்பாக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த வழக்கில் 'ஐ லவ் யூ' என்று வாலிபர் தனது உணர்வை வெளிப்படுத்தியதன் பின்னணியில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான எந்த சூழலும் இல்லை. தகாத முறையில் தொடுதல், வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்றுதல், அநாகரிகமான சைகைகள் செய்தல் அல்லது பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பது போன்றவை தான் பாலியல் நோக்கமாக இருக்க முடியும்.
இந்த வழக்கில் 'ஐ லவ் யூ' என்று சொன்னதில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது மானபங்கம் அல்லது பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. யாராவது ஒருவர் வேறொரு நபரை காதலிப்பதாக கூறினால் அல்லது தனது உணர்வுகளை வெளிப்படுத்தினால், அதில் பாலியல் நோக்கம் இருக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை. எனவே வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.