PM SHRI திட்டம்: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
- சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.
இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதம் தெரிவித்து பின்னர் எழுந்த எதிர்ப்பினால் பின்வாங்கியது.
இந்நிலையில், மக்களவையில், PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.