சபரிமலைக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை: 24-ந்தேதி வரை ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு
- ஸ்பாட் புக்கிங் பிரிவுக்காக நிலக்கல் பகுதியில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
- ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், 3-வது நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்து உள்ளது. தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவில் பக்தர்கள் வருவதால் சில கட்டுப்பாடுகளை விதிக்க சபரிமலை தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனத்துக்கு சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டம் காரணமாக நேற்று முன்தினம் 30 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்ட ஸ்பாட் புக்கிங் மூலம் இனி தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படுவர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் அவர்கள் மறுநாளில்தான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
அதேபோல் ஸ்பாட் புக்கிங் பிரிவுக்காக நிலக்கல் பகுதியில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடைப்பந்தலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு கோவில் தேவஸ்வம் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவில் அருகில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய தமிழகத்தில் இருந்து 200 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.