இந்தியா

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு- அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜர்

Published On 2025-07-14 16:55 IST   |   Update On 2025-07-14 16:55:00 IST
  • 2017 பிப்ரவரியில் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது.
  • வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் சம்மனை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரி. இவர் காங்கிரசின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

2015-ல் இந்தியாவில் வசித்த அவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. அவர் தொடர்புடைய இடங்களில் வருமானத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, 2016-ல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்த விவகாரத்தில், அவர் மீது, 2017 பிப்ரவரியில் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது.

இதற்கிடையே சஞ்சய் பண்டாரி மீதான சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவரும், தொழில் அதிபருமான ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனால் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் சம்மனை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதை தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்தநிலையில் சஞ்சய் பண்டாரி வழக்கில் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று ஆஜரானார்.

அவரிடம் இந்த வழக்கு உள்பட 3 வெவ்வேறு சட்டவிரோத பணபரி வர்த்தனை வழக்குகள் தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே நில மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News