இந்தியா

நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை பழிவாங்கி விட்டீர்கள் - பிரதமர் மோடி

Published On 2025-05-13 15:55 IST   |   Update On 2025-05-13 20:28:00 IST
  • இந்தியா மீது கண் வைக்கும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள்.
  • எதிரிகள் மீண்டும் மீண்டும் முயன்றும் நமது பாதுகாப்பு அரணை தகர்க்க முடியவில்லை

இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தில், நமது ராணுவ வீரர்கள் பணியாற்றிய விதம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

அங்கு விமான படை வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை நீங்கள் பழிவாங்கிவிட்டீர்கள். இந்தியா மீது கண் வைக்கும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள். எதிரிகள் மீண்டும் மீண்டும் முயன்றும் நமது பாதுகாப்பு அரணை தகர்க்க முடியவில்லை

வெறும் 20 நிமிடங்களில், பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை தகர்த்தெறிந்து விட்டோம். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கி கொள்ள இடம் இல்லாத அளவுக்கு தாக்கியுள்ளோம்.

தீவிரவாத முகாம்களை தாக்க வேண்டும் என்பதே இலக்கு, பாகிஸ்தான் அல்ல. இந்தியாவுடன் மோதினால் அழிவு மட்டுமே கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்

இனி பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்க முடியும் என பயங்கரவாதிகள் கனவிலும் நினைக்க முடியாது. பயங்கரவாதிகளை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே தாக்கி அழிப்போம் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது.

விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துவிட்டனர்; முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு எனது சல்யூட். பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தின் வீரியத்தை உலகமே உணர்ந்துள்ளது.

சக்திவாய்ந்த நமது ஏவுகணைகள் சத்தத்துடன் எதிரி நாட்டு இலக்குகளை அடையும்போது, அவர்களுக்கு அந்த சத்தம் 'பாரத் மாதா கீ ஜெய்' என்றுதான் கேட்கும்" என்று தெரிவித்தார்

பிரதமர் மோடியின் உரையில் இடையே விமான படை வீரர்கள் பாரத் மாதா கீ ஜே என்று கூச்சலிட்டனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது செயல்பட்ட விமானப்படை தளங்களில் ஒன்று ஆதம்பூர் விமானப்படை தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News