காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ராகுல்காந்தி கல்லூரி மாணவிகளை சந்தித்தபோது எடுத்த படம்.
ராகுல்காந்தி திருமணம் எப்போது?- மீண்டும் எழுப்பப்பட்ட கேள்வி
- காஷ்மீரை டெல்லியில் இருந்து இயக்குவது சரியல்ல.
- பிரதமர் மோடியுடன் எனக்குள்ள பிரச்சனை என்னவென்றால், அவர் யார் சொல்வதையும் கேட்பது இல்லை.
புதுடெல்லி:
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்திக்கு 54 வயது ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
கடந்த மே மாதம் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொதுமக்களில் இருந்து ஒருவர், ''எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு ராகுல்காந்தி, ''விரைவில் நடக்கும்'' என்று பதில் அளித்தார்.
இந்நிலையில், இந்த தடவை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கல்லூரி மாணவிகளுடன் நடத்திய உரையாடலின்போது, ராகுல்காந்தியிடம் அக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த உரையாடல் வீடியோ, ராகுல்காந்தியின் 'யூ டியூப்' சேனலில் வெளியாகி உள்ளது.
உரையாடலின்போது, ''திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தம் வருகிறதா?'' என்று மாணவிகளிடம் ராகுல்காந்தி கேட்டார். அவர்கள் அதே கேள்வியை ராகுல்காந்தியிடம் கேட்டனர்.
அதற்கு ராகுல்காந்தி, ''திருமணம் செய்து கொள்ளுமாறு இருபது, முப்பது ஆண்டுகளாக நிர்பந்தத்தை சந்தித்து வருகிறேன்'' என்று புன்னகையுடன் கூறினார்.
''திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறீர்களா?'' என்று மாணவிகள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி, ''நான் திட்டமிடுவது இல்லை. அதுவாக நடந்தால் நடக்கும்'' என்று கூறினார்.
''எங்களையும் திருமணத்துக்கு அழையுங்கள்'' என்று மாணவிகள் ஒரே குரலில் தெரிவித்தனர். ''அழைக்கிறேன்'' என்று சிரிப்பொலிக்கு மத்தியில் ராகுல்காந்தி கூறினார்.
காஷ்மீர் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடக்கிறது.
இந்த உரையாடலின்போது, அதுபற்றி ராகுல்காந்தி கூறியதாவது:-
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் ஏற்கவில்லை.
காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் தெளிவான நிலைப்பாடு. காஷ்மீருக்கான பிரதிநிதிகள் வேண்டும். காஷ்மீரை டெல்லியில் இருந்து இயக்குவது சரியல்ல.
பிரதமர் மோடியுடன் எனக்குள்ள பிரச்சனை என்னவென்றால், அவர் யார் சொல்வதையும் கேட்பது இல்லை. அவர் செய்வது தவறு என்று அவரிடம் ஆதாரம் காட்டினாலும், அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அது அவரது பலவீனத்தால் வரும் குணம்.
இவ்வாறு அவர் கூறினார்.