இந்தியா

நாட்டை ஆள்வது தனது பிறப்புரிமை என ராகுல் காந்தி நம்புகிறார்: பா.ஜ.க. கடும் தாக்கு

Published On 2023-03-30 02:16 GMT   |   Update On 2023-03-30 02:16 GMT
  • அனைத்து நிறுவனங்களும் தனது காலுக்கு கீழே இருப்பதாக ராகுல் நினைக்கிறார்.
  • பா.ஜனதா கட்சியினர், காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி :

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதை குறைகூறியுள்ள ஆளும் பா.ஜனதா கட்சியினர், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ராகுல் காந்தியையும் கடுமையாக சாடி வருகின்றனர்.

அந்தவகையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ராகுல் காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால், நாட்டை ஆள்வது தனது பிறப்புரிமை என ராகுல் காந்தி நம்புகிறார். அரசியலமைப்பு, கோர்ட்டு மற்றும் நாடாளுமன்றத்திற்கு மேலாக தன்னைக் கருதுகிறார்.

அனைத்து நிறுவனங்களும் தனது காலுக்கு கீழே இருப்பதாக அவர் நினைக்கிறார். அதனால்தான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மீதான அவரது அவதூறுக்கு கோர்ட்டு தண்டனை விதித்தது மற்றும் அதைத்தொடர்ந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது போன்றவற்றால் அவர் வருத்தத்தில் உள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காக புதிய வீரியத்துடன் செயல்படும் தற்போதைய அரசாங்கத்தை தாக்குவது என்ற ஒரே இலக்குடன் ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மந்திரி சபையால் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் ஒன்றை ராகுல் காந்தி கிழித்து எறிந்ததையும் அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டினார்.

Tags:    

Similar News