தேர்தல் தோல்விகள் ராகுல் காந்தியை விரக்தியடைய செய்துள்ளன: மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுக்கு ஜே.பி. நட்டா பதில்
- மகாராஷ்டிரா தேர்தலில் கிரிக்கெட் போன்று மேட்ச் பிக்சிங் நடைபெற்றது.
- பீகார் தேர்தலிலும் இதுபோன்ற நடைபெறும்.
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கூட்டணி அதிக வெற்றியை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நீண்ட கட்டுரை எழுதியுள்ள ராகுல் காந்தி, கிரிக்கெட் போட்டி போன்ற மேட்ச் பிக்சிங் நடைபெற்றது. இதேபோல் பீகார் தேர்தலிலும் மேட்ச் பிக்சிங்கில் பாஜக ஈடுபடும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் தோல்விகள் ராகுல் காந்தியை விரக்தியடைய செய்துள்ளன என, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பதில் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி எப்படி மோசடி நடக்கிறது என்பதை வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக சுட்டுக்காட்டிருந்தார். இதற்கு நட்டா அதேபோல் காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை வரிசைப்படுத்தியுள்ளார்.
ராகுல் காந்திக்கு நட்டா பதில் அளித்து கூறியதாவது:-
1. காங்கிரஸ் கட்சி அதன் செயல்களால் தேர்தல்களுக்குப் பிறகு தோல்வியடைகிறது.
2. சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, அவர் வினோதமான சதித்திட்டங்களை உருவாக்கி கூக்குரலிடுகிறார்.
3. அனைத்து உண்மைகளையும் தரவுகளையும் புறக்கணிக்கிறார்.
4. எந்த ஆதாரமும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை அவதூறு செய்கிறார்.
5. உண்மைகளுக்கு மேல் தலைப்புச் செய்திகளை எதிர்பார்க்கிறார். மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்ட போதிலும், அவர் வெட்கமின்றி பொய்களைப் பரப்பி வருகிறார். மேலும், பீகாரில் தோல்வி நிச்சயம் என்பதால் அவர் இதைச் செய்கிறார்.
ஜனநாயகத்திற்கு நாடகம் தேவையில்லை. உண்மை தேவை. தொடர்ச்சியான தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர் காங்கிரஸ் தலைவர் தனது விரக்தியில் வினோதமான சதித்திட்டங்களை உருவாக்குகிறார்.
இவ்வாறு நட்டா பதில் அளித்துள்ளார்.