இந்தியா

லாலு பிரசாத்தின் விருப்பத்தை நிறைவேற்றிய பிரதமர் மோடி.. வக்பு மசோதா விவாதத்தில் அமித் ஷா FLASHBACK

Published On 2025-04-02 20:12 IST   |   Update On 2025-04-02 20:31:00 IST
  • வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
  • லாலு பிரசாத்தின் விருப்பங்களை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை

வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி தாக்கல் செய்தது. பின் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள் மசோதா தொடர்பான தவறான கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப முயற்சிக்கிறது என்று பேசினார்.

தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஆசையை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் என்று அமித் ஷா தெரிவித்தார்.

கடந்த 2013 இல் காங்கிரஸ் கூட்டணி அரசு வக்பு திருத்தங்கள் கொண்டுவந்தத்து. அந்த சமயத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், "அரசு முன்வைத்த திருத்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். பெரும்பாலான நிலங்கள், அது அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருந்தாலும் சரி, வேறுவிதமாக இருந்தாலும் சரி, அபகரிக்கப்பட்டுள்ளன.

வக்பு வாரியத்தில் உள்ளவர்கள் அனைத்து பிரதான நிலங்களையும் விற்றுவிட்டனர். பாட்னாவில், டாக் பங்களா சொத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இது போன்ற ஏராளமான கொள்ளை நடந்துள்ளது. நாங்கள் திருத்தங்களை ஆதரிக்கிறோம், ஆனால் அரசாங்கம் எதிர்காலத்தில் ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து அத்தகையவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

இதை இன்று அவையில் மேற்கோள் காட்டிய அமித் ஷா, எதிர்க்கட்சி இருக்கைகளை சுட்டிக்காட்டி, "லாலு பிரசாத்தின் விருப்பங்களை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதைச் செய்கிறார். லாலு ஜி கடுமையான சட்டம் வேண்டும் என்று கேட்டிருந்தார்" என்றார். லாலு பிரசாத் அப்போது பேசிய வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News