மெதுவாக சென்ற கார்.. உள்ளே பல நபர்கள் - டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து காவல் ஆணையர் விளக்கம்
- 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நேரில் பார்வையிட்ட பின் பேசிய டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா பேட்டியளித்தார்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பின் பேசிய டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா,
மெட்ரோ நிலையத்தின் முதலாம் வாயில் அருகே மாருதி ஈகோ கார் முதலில் வெடித்தது. அதில் பல நபர்கள் பயணித்ததாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. கார் மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது வெடித்துள்ளது. எனவே அருகில் இருந்த மற்ற கார்கள், ஆட்டோக்களிலும் தீ பரவியுள்ளது.
மாலை 6.52 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் புலனாய்வு அதிகாரிகளும் தடயவியல் துறை நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான விசாரணைக்க்குப் பின் உண்மை தெரியவரும்" என்று தெரிவித்தார்.