இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கிறார் ஹேமந்த் சோரன்: கோர்ட் அனுமதி

Published On 2024-02-03 09:46 GMT   |   Update On 2024-02-03 09:46 GMT
  • கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
  • இதையடுத்து, சம்பாய் சோரன் முதல் மந்திரியாக நேற்று பதவி ஏற்றுள்ளார்.

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திவருகிறது.

பதவி ஏற்றுக்கொண்ட சம்பாய் சோரன் 10 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இதனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடத்தமுடியாத வகையில், அவர்கள் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, திங்கட்கிழமை சட்டமன்றம் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திங்கட்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி கோர்ட் அனுமதி

அளித்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News