இந்தியா

1947-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்துடன் வைரலாகும் பிரதமர் மோடியின் கைக்கடிகாரம்

Published On 2025-11-20 14:13 IST   |   Update On 2025-11-20 14:13:00 IST
  • ரோமன் பாக் பிராண்ட் கைக்கடிகாரத்தை ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
  • 43 மி.மீ. அளவுள்ள துருப்பிடிக்காத எக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே தான் அணியும் ஆடையின் மூலமாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆவார். குறிப்பாக சுதந்திர தினம், குடியரசு தினம் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளின் போது அவர் அணியும் ஆடை அனைவரையும் கவரும். மேலும் அதன் பின்னணி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகும்.

அந்த வகையில் பிரதமர் மோடி தற்போது அணிந்துள்ள கைக்கடிகாரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. நம்நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுகூறும் வகையில் அவரது கைக்கடிகாரம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அதனை போற்றும் வகையில் 1947-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டு அவரது கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் நடுவே இந்தியாவின் சுதந்திர பயணத்தை குறிக்கும் மற்றும் நாட்டின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலான புலியின் உருவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை கொண்ட அந்த ரோமன் பாக் பிராண்ட் கைக்கடிகாரத்தை ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இது, 43 மி.மீ. அளவுள்ள துருப்பிடிக்காத எக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு ரூபாய் நாணயம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அச்சிடப்பட்ட கடைசி நாணயம் என்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த கைக்கடிகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News