பத்தனம்திட்டாவுக்கு பிரதமர் மோடி இன்று வருகை
- பிரதமர் மோடி இன்று கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு வருகிறார்.
- பிரதமர் மோடி வருகையையொட்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு வருகிறார்.
அவர் அங்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பத்தனம்திட்டா பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அனில் ஆன்றனி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
பத்தனம்திட்டா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆன்றோ ஆன்றனி எம்.பி.யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் நிதித்துறை மந்திரி தாமஸ் ஐசக்கும் போட்டியிடுகிறார்கள். மும்முனை போட்டி நிலவும் இந்த தொகுதியில் அனில் ஆன்றனிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் நடத்த இருப்பதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வருகிற 17-ந் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பத்தனம்திட்டா வர இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது அவரது பயண திட்டம் மாற்றப்பட்டு முன்கூட்டியே இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.