உலகில் இந்தியாவுக்கு பெரிய எதிரிகள் யாரும் இல்லை- பிரதமர் மோடி
- இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது.
- இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை.
பாவ்நகர்:
பிரதமர் மோடி, குஜராத்தின் பாவ்நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான். வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நாட்டின் தோல்வியும் அதிகமாகும். நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால் நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கான தீர்மானத்தை மற்றவர்களைச் சார்ந்து இருக்க விட்டுவிட முடியாது. இந்த சார்பு எதிரியை நாம் ஒன்றாக தோற்கடிக்க வேண்டும். இதற்கு சுயசார்பு இந்தியாதான் ஒரே தீர்வாகும்.
இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியர்களின் அனைத்து ஆற்றலையும் காங்கிரஸ் புறக்கணித்தது. இதனால் சுதந்திரம் அடைந்து 6 முதல் 7 தசாப்தங்களுக்குப் பிறகும் இந்தியா அதற்கு தேவையான வெற்றியை அடையவில்லை. காங்கிரஸ் அரசின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தன.
இவ்வாறு அவர் பேசினார்.