இந்தியா

அகமதாபாத் விமான விபத்தில் 265 பேர் பலி: 5 உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

Published On 2025-06-13 15:06 IST   |   Update On 2025-06-13 17:32:00 IST
  • விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
  • உடல் கருகிய நிலையில் உள்ளதால், அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 (போயிங் 787 ட்ரீம்லைனர்), புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள பி.ஜே. மருத்துக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

மருத்துவ வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் விடுதியும் அடங்கும். இங்கு மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் விடுதி மெஸ்சில் இருந்த மருத்துவ மாணவர்களில் சிலரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இதுவரை 265 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததில் உடல்கள் கருகின. இதனால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் உறவினர்கள் ரத்த மாதிரிகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட 215 பேரின் உறவினர்கள் ரத்த மாதிரிகளை வழங்கியுள்ளனர். இதனை வைத்து உடல்களை அடையாளம் காண மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டி.என்.ஏ. பரிசோதனை ஒத்துப்போகும்போது, அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பிரதமர் மோடி விமான விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனை சென்று காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார். விமான விபத்தில் உயிர் பிழைத்தவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News