இந்தியா

பிரதமர் மோடி, கார்கே சிரித்துப்பேசி சாப்பிட்டதை படத்தில் காணலாம்.

பாராளுமன்றத்தில் மோதலுக்கு மத்தியில் பிரதமர் மோடியுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய கார்கே

Published On 2022-12-21 03:33 GMT   |   Update On 2022-12-21 03:33 GMT
  • அடுத்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
  • பாராளுமன்றத்தில் சிறப்பு சிறுதானிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுடெல்லி :

காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, நேற்று முன்தினம் ராஜஸ்தானில் பா.ஜ.க. பற்றி கூறிய விமர்சனம், மாநிலங்களவையிலும், மக்களவையிலும் நேற்று புயலை கிளப்பின.

இதனால் காரசார மோதல்களுக்கு பஞ்சம் இல்லை.

ஆனால் மற்றொரு புறம் ஒரு சுவாரசிய சம்பவமும் பாராளுமன்றத்தில் நேற்று அரங்கேறியது. அடுத்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்றத்தில் சிறப்பு சிறுதானிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்தில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து சிரித்துப்பேசியவாறு நவதானிய உணவுகளை விரும்பி ருசித்து சாப்பிட்டனர்.

இது ஒரு மாறுபட்ட காட்சியாக அமைந்தது.

இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறி இருந்ததாவது:-

2023-ம் ஆண்டினை நாம் சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாட தயாராகி வருகிறோம். இந்த தருணத்தில் பாராளுமன்றத்தில் ருசிமிக்க மதிய உணவினை சாப்பிட்டோம். இதில் சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன. இதில் கட்சி வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

இவ்வாறு அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதையொட்டிய படங்களையும் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News