குண்டு வீச்சு எதிரொலி: மணிப்பூரில் காலவரையின்றி பெட்ரோல் பங்குகள் மூடல்
- பெட்ரோல் பங்கு மீது சமூக விரோதிகள் குண்டு வீச்சு.
- குண்டு வீச்சு மூலம் தீவிரமான மிரட்டல்களை எதிர்கொண்டு வருவது தெளிவாகிறது- டீலர்கள் சங்கம்.
மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் மீது இரண்டு நாட்களுக்கு முன்னதாக குண்டு வீசப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மணிப்பூர் பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் காலவரையின்றி மூடப்படும் என பெட்ரோலிய டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டீலர்கள் சங்கம் கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "பெட்ரோல் பங்க் மற்றும் டீலர்களின் பாதுகாப்பு விசயத்தில் மாநில அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவம் மூலம், இன்னும் தீவிரமான மிரட்டல்களை எதிர்கொண்டு வருவது தெளிவாகிறது.
உடனடி கவனமும் சுமுகமான தீர்வும் வழங்கப்படும் வரை, பள்ளத்தாக்கு பகுதிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இன்று முதல் காலவரையின்றி மூடுவதற்கு ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்தால், அரசாங்கம் பொறுப்புடைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் மொய்ராங் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது குண்டு வீசினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.