டெல்லி தேர்தல் முடிவு குறுக்குவழி அரசியல் சகாப்தத்திற்கான முடிவு: பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
- மோடியின் உத்தரவாதத்தை நம்பியதற்காக டெல்லி மக்களுக்கு நான் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.
- 21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள் இப்போது முதல் முறையாக டெல்லியில் பாஜக-வின் நல்லாட்சியைக் காண்பார்கள்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலைப் பெற்றது. 48 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 27 வருடத்திற்குப் பிறகு டெல்லி மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இந்த வெற்றியை பாஜக மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் பாஜக தொண்டர்களுடன் வெற்றியை பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி பாஜக தலைமை அலுவலகம் சென்றார்.
அங்கு தொண்டர்களுக்கு மத்தியில் பேசும்போது கூறியதாவது:-
இன்று டெல்லி மக்களின் மனதில் உற்சாகமும் நிம்மதியும் நிலவுகிறது. வெற்றிக்கான உற்சாகமும் நிம்மதியும் டெல்லியை ஆப்டா (பேரழிவு- ஆம் ஆத்மியை இவ்வாறு பிரதமர் மோடி அழைத்தார்) இல்லாத மாநிலமாக ஆக்குவதற்கானது. மோடியின் உத்தரவாதத்தை நம்பியதற்காக டெல்லி மக்களுக்கு நான் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.
டெல்லி எங்களுக்கு முழு மனதுடன் அன்பை அளித்துள்ளது, மேலும் வளர்ச்சியின் வடிவத்தில் இரட்டிப்பு அன்பை நாங்கள் உங்களுக்கு திருப்பித்தருவோம் என்று மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன்.
நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களின் இதயங்களிலும் ஒரு வலி இருப்பதைக் கண்டேன். அந்த வலி டெல்லிக்கு முழுமையாக சேவை செய்ய முடியாதது பற்றியது. ஆனால் இன்று டெல்லி எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள் இப்போது முதல் முறையாக டெல்லியில் பாஜக-வின் நல்லாட்சியைக் காண்பார்கள். இன்றைய முடிவுகள் பாஜக-வின் இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் மீது நாடு எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மக்களவைத் தேர்தலில் அந்த வெற்றிக்குப் பிறகு, முதலில் ஹரியானாவில் முன்னெப்போதும் இல்லாத சாதனையை நாங்கள் செய்தோம். பின்னர் மகாராஷ்டிராவில் ஒரு புதிய சாதனையை செய்தோம். இப்போது டெல்லியில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இன்று டெல்லி மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். டெல்லியின் உண்மையான உரிமையாளர்கள் டெல்லி மக்கள் மட்டுமே. டெல்லியின் உரிமையாளர்கள் என்று நினைத்தவர்களை உண்மை தண்டித்துள்ளது. அரசியலில் குறுக்குவழிகள், பொய்களுக்கு இடமில்லை என்பது டெல்லி மக்கள் தீர்ப்பின் மூலம் தெளிவாகிறது. குறுக்குவழி அரசியலின் சகாப்தத்தை மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.