'அரசு வேலை' பறிபோகும் என்ற அச்சத்தில் 3 நாள் சிசுவை காட்டுக்குள் தவிக்கவிட்டு சென்ற பெற்றோர்
- இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததது.
- புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் அரசு வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில், மூன்று நாட்களே ஆன சிசுவை பெற்றோரே காட்டில் வீசிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் நந்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் பப்லு தண்டோலியா. அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கும் மனைவி ராஜ்குமாரி தண்டோலியாவுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த அண்மையில் ராஜ்குமாரிக்கு 4ஆவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 3 நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் கொண்டு சென்று ஒரு கல்லின் ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
மத்தியப் பிரதேச அரசு ஜனவரி 26, 2001 அன்று மத்தியப் பிரதேச அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 'இரண்டு குழந்தைகள்' மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
இதை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர் அரசுப் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கைப்படி வேலை இழந்துவிடுவோம் என்ற பயத்தாலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
காலையில் நடைபயிற்சிக்குச் சென்ற கிராம மக்கள் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, கல்லிடுக்கில் கிடந்த குழந்தையைக் கண்டுபிடித்து, காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு, இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து குழந்தை பத்திரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.