இந்தியா

பஹல்காம் தாக்குதலை யார் செய்தாலும் தவறுதான் - பாகிஸ்தான் மக்கள் கருத்து

Published On 2025-04-25 08:06 IST   |   Update On 2025-04-25 08:06:00 IST
  • பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் நாட்டுக்கு திரும்புவதற்காக வாகா எல்லையில் குவிந்தனர்.
  • நாங்கள் இந்தியாவுடன் சகோதரத்துவத்தையும், நட்புறவையும் விரும்புகிறோம்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேறும்படி இந்தியா அறிவித்துள்ளதால், சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் நாட்டுக்கு திரும்புவதற்காக நேற்று வாகா எல்லையில் குவிந்தனர்.

அவர்களில் ஒருவரான அகமது என்பவர் கூறும்போது, "நாங்கள் இங்குள்ள எங்கள் உறவினர்களை பார்க்க கடந்த 15-ந்தேதி வந்தோம். 45 நாட்கள் விசாவில் எங்களை அனுமதித்து இருந்தனர். பஹல்காம் தாக்குதலை யார் செய்து இருந்தாலும் தவறானதாகும். நாங்கள் இந்தியாவுடன் சகோதரத்துவத்தையும், நட்புறவையும் விரும்புகிறோம். இங்கு வெறுப்புக்கு இடமில்லை. அதை நாங்கள் விரும்பவுமில்லை" என்றார்.

மற்றொரு பாகிஸ்தானியரான முஸ்தபா கூறுகையில், பஹல்காம் தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என்றாலும், அனைத்து பாகிஸ்தானியர்களையும் இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்வது சரியான முடிவு அல்ல." என்றார்.

Tags:    

Similar News