நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை: பிரதமர் மோடி மீண்டும் அவசர ஆலோசனை
- பாதுகாப்பு ஒத்திகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, வர்த்தக தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது.
இதற்கிடையே பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏவுகணை சோதனையை நடத்தியதால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சூழலில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன.
அதில் பாதுகாப்பு ஒத்திகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள், அணுமின் நிலையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்பு உளவியல் ரீதியாக எதிா்வரும் சூழ்நிலைகளுக்கு பொதுமக்களை தயார்படுத்தும் விதமாகவே இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை நடத்த மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கும் என்ற சூழலில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடியை இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.
நேற்று மோடியை அஜித் தோவல் சந்தித்திருந்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பாதுகாப்பு ஒத்திகை, பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கை, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் மோடி-தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2 முறை சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் நாளை பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு இன்று பல்வேறு மாநிலங்களில் முன்னோட்டமாக பயிற்சி மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு-காஷ்மீரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை முன்னோட்டம் நடந்தது. இதேபோல் உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுடன் இன்று மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் இன்று காலை 10.45 மணிக்கு சிவில் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டம் காணொலி மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் சிவில் பாதுகாப்பு கூட்டம் காணொலி மூலம் நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை தலைவர்கள் பங்கேற்றனர். இதில் நாளை நடைபெற உள்ள பாதுகாப்பு ஒத்திகை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீவிரமாக எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பொதுமக்களுக்கு உளவியல் ரீதியாகவும், போர்கால சூழலை எதிர்கொள்ளவும் பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகளை எடுக்கும் படியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும் நாடு முழுவதும் உஷார் நிலையை மேற்கொள்ளும்படி, பாதுகாப்பு நடவடிக்கைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மத்திய அரசின் அவசர ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் உள்ள கல்பாக்கம், விமான நிலையம் உள்ள சென்னை மீனம்பாக்கம், ராணுவ தொழிற்சாலை உள்ள ஆவடி, மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உள்ள மணலி ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
பாதுகாப்பு ஒத்திகை ஒருங்கிணைப்பை மாவட்ட அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள் என்றும் சிவில் பாதுகாப்பு வார்டன்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தரைமட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும், என்.எஸ்.எஸ், என்.சி.சி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்திகைக்கு பிறகு ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எல்லையில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானையொட்டிய சா்வதேச எல்லையை இணைக்கும் இந்திய எல்லை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு - காஷ்மீா் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய உள்துறையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "பாதுகாப்பு ஒத்திகையின்போது என்னன்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி எல்லையோர கிராமங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டன.
பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த தாக்குதல் எங்கு, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளது.