இந்தியா

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு- பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

Published On 2025-07-28 11:16 IST   |   Update On 2025-07-28 13:36:00 IST
  • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஆளும் கட்சியை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் கடந்த வாரம் முழுவதும் அலுவல் எதையும் கவனிக்காமல் பாராளுமன்றம் முடங்கியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன.

அதன்படி மக்களவையில் இன்றும், மாநிலங்களவையில் நாளையும் (செவ்வாய்க்கிழமை) விவாதம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இரு அவைகளிலும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

இதையடுத்து பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க் கள் இன்று காலையில் பாராளுமன்றத்துக்கு வந்தனர். காலை 10.30 மணியளவில் அவர்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே ஒன்று கூடினார்கள்.

அப்போது பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ஆளும் கட்சியை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலையில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் SIR என்ற ஜனநாயக விரோத முயற்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார். 



Tags:    

Similar News