புதுச்சேரி

வெயில் தாக்கம் எதிரொலி - புதுவையிலும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

Update: 2023-05-30 22:33 GMT
  • புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
  • இதனால் அங்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (வியாழக்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அண்டை மாநிலமான தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுவையிலும் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறையை நீடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி, துணை இயக்குனர் சிவகாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் யோசனை கூறப்பட்டது.

இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனையின்பேரில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் பள்ளிகள் ஜூன் மாதம் 7-ம் தேதி திறக்கப்படும். புதுவையில் உள்ள 127 அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளி திறக்கும் நாளில் புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News