எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை: காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு
- என்னை ஏன் ஓரங்கட்டினர் என்று புரியவில்லை.
- என்னை அவமதித்தால் வேதனைக்கு உள்ளானேன்.
பெங்களூரு :
பெங்களூருவில் நடந்த விழாவில் காங்கிரசில் சேர்ந்த பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான், தற்போது காங்கிரசில் சேர்ந்தது ஏன் என்று பலருக்கும் கேள்வி எழும். ஆனால் கடந்த சில மாதங்களாக நான் அனுபவித்த வேதனையை யாரும் புரிந்துகொள்ளவில்லை. நான் பா.ஜனதா கட்சியை கட்டமைத்தேன். வட கர்நாடகத்தில் கட்சியை வளர்த்தேன். எனக்கு பா.ஜனதா வழங்கிய பதவிகளுக்கான நான் விசுவாசமிக்க தொண்டராக கட்சியை பலப்படுத்தினேன். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் நான் 6 முறை எம்.எல்.ஏ. ஆகியுள்ளேன். 7-வது முறையாக போட்டியிட உள்ளேன்.
கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தேன். எனக்கு டிக்கெட் இல்லை என்று கூறியபோது அதிர்ச்சி அடைந்தேன். மூத்த தலைவரான எனக்கு உரிய கவுரவத்தை கட்சி வழங்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றால் ஒரு வாரம் முன்னதாகவே என்னிடம் பேசி இருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டு இருப்பேன்.
நான் எப்போதும் ஆட்சி அதிகாரத்திற்காக அரசியல் செய்தது கிடையாது. நான் சங்பரிவாரில் இருந்து வந்தவன். என்னை ஏன் ஓரங்கட்டினர் என்று புரியவில்லை. எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. என்னை அவமதித்தால் வேதனைக்கு உள்ளானேன். எனது தொகுதி மக்களின் சுயமரியாதைக்கு அவமரியாதை ஏற்பட்டதால், நான் வேறு வழியின்றி பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளின் கருத்தை கேட்டு இந்த முடிவை எடுத்தேன்.
எனக்கு ஏற்பட்ட அவமானத்தை சரிசெய்யவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். 6 மாதம் கழித்து வேண்டுமானால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் அப்போது யாரை வேண்டுமானாலும் நிறுத்தி கொள்ளுங்கள் என்று பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் கூறினேன். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கர்நாடகத்தில் இன்று மாற்றத்திற்கான நாள் தொடங்கியுள்ளது. நான் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியை செய்வேன்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.