ஹெலிகாப்டருக்கு பதில் ஒன்றரை மணி நேரம் காரில் பயணித்த பிரதமர் மோடி: காரணம் இதுதானாம்..!
- சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
- கனமழையால் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கனமழை பெய்த காரணத்தால் ஹெலிகாப்டரில் செல்வது பாதுகாப்பானது அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், சூரசந்த்பூரில் மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி திட்டவட்டாக தெரிவித்துள்ளார். இதனால் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. அதேவேளையில் சாலை வழியாக சென்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனால் சாலை வழியாக பிரதமர் மோடி சூரசந்த்பூர் சென்றார். அவருக்கு சாலையின் இரு பக்கமும் மக்கள் அதிக அளவில் திரண்டு வரவேற்று அளித்தனர். மேலும், பேரணி நடைபெற்ற இடத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில் "மணிப்பூர் மக்களின் உறுதிக்கு சல்யூட். கனமழை பெய்த போதிலும் கூட, மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளனர். உங்களுடைய அன்புக்காக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஹெலிகாப்டர் கனமழை காரணமாக இங்கு வர முடியவில்லை. இதனால் நான் சாலை மார்க்கமாக வர முடிவு செய்துள்ளேன். இன்று சாலையில் நான் கண்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஹெலிகாப்டர் மூலம் இல்லாமல், நான் சாலை வழியாக வந்தது நல்லது என்று என் மனம் சொல்கிறது.
வழியெங்கும் மூவர்ணக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி அனைவரும் எனக்கு அன்பும் பாசமும் அளித்த இந்த தருணத்தை என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாது. மணிப்பூர் மக்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.