சாலைகளை மேம்படுத்த துபாய்க்கு வரச்சொல்லி அந்நாட்டு இளவரசர் கூப்பிட்டாங்க - நிதின் கட்கரி
- எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது என நிதின் கட்கரி பேசினார்.
- அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன என நிதின் கட்கரி பேசினார்.
இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து விளக்கம் அளித்த நிதின் கட்கரி, "எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "துபாயின் சாலைகளை மேம்படுத்துவதற்கு நிதின் கட்கரியை 6 மாதங்கள் அனுப்புங்கள் என அந்நாட்டு இளவரசர் பிரதமர் மோடியிடம் கேட்டார். அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன" என்று தெரிவித்தார்.
துபாய் சாலைகளை விட இந்தியாவின் சாலைகள் தரமாக உள்ளதாக நிதின் கட்கரி பேசியது இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.