குள்ளமாக இருந்ததால் காதல் திருமணம் செய்த புது மாப்பிள்ளை கொலை- பெண் வீட்டார் வெறிச்செயல்
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
- போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பாப்பட்லா மாவட்டம், கொலக்கலூவை சேர்ந்தவர் நாக கணேஷ். இவர் குண்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஷிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் தூரத்து உறவினரான தெனாலி அடுத்த எடவூருவை சேர்ந்த கீர்த்தி அஞ்சனாதேவி என்பவரை பெண் கேட்டு சென்றனர். நாக கணேஷ் தங்களது மகளை விட உயரம் குறைவாக இருப்பதால் பெண் தர அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.
நாக கணேஷ், கீர்த்தி அஞ்சனாதேவி இருவரும் சந்தித்த முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டனர். இருவரும் தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமலேயே செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். நீண்ட நேரம் செல்போனில் பேசி அரட்டை அடித்து காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். அமராவதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். தங்களது உயிருக்கு கீர்த்தியின் பெற்றோர் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் நல்லபாடு போலீசில் பாதுகாப்பு கேட்டு சரணடைந்தனர்.
போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். தங்களது திருமணம் கோவிலில் எளிமையான முறையில் நடந்ததால் உறவினர்கள், நண்பர்களை அழைத்து பிரம்மாண்ட முறையில் திருமண வரவேற்பு விழா நடத்த புதுமணத் தம்பதியினர் முடிவு செய்தனர்.
நாக கணேஷ் நேற்று காலை வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு நண்பர் ஒருவருடன் வங்கிக்கு சென்றார். நகைகளை அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தார். நாக கணேஷ் வங்கிக்கு சென்றதை அறிந்த கீர்த்தியின் தந்தை, மகன் துர்காவிடம் எத்தனை பேர் இருந்தாலும் வெட்டி சாய்த்து விட்டு வா நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து கீர்த்தியின் சகோதரர் தனது 2 நண்பர்களுடன் பைக்கில் வந்து நாக கணேசின் பைக்கை வழிமறித்தார்.
தன்னிடமிருந்த கத்தியை எடுத்து நாக கணேஷை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த நாக கணேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
துர்கா ராவ், நாக கணேஷை வெட்டி கொலை செய்வதை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் தாலியில் உள்ள ஈரம் காய்வதற்கு முன்பாகவே தங்கையின் கணவரை கொலை செய்து பூவையும் பொட்டையும் பறித்த கல் நெஞ்சம் படைத்த துர்கா ராவிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பதிவு செய்து வருகின்றனர்.
கொலை குறித்து நல்லபாடு போலீசார் வழக்கு பதிவு செய்து துர்கா ராவ் அவரது 2 நண்பர்கள், கீர்த்தியின் தந்தை ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.