மகாராஷ்டிரா பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் - தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
- தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
- மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
4 நாட்களுக்கு முன்பு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியுள்ளார்.
பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் பிரசாந்த் பங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
போலியான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டதாக பெண் டாக்டரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இது தற்கொலை இல்லை என்றும் பிரேத பரிசோதனையை மாற்ற டாக்டர் ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.