இந்தியா

திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும்: உள்துறை அமைச்சகம்

Published On 2024-02-24 10:28 GMT   |   Update On 2024-02-24 10:28 GMT
  • 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்
  • பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் கடந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

அதே சமயம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஒட்டி விபத்து நடந்து யாரேனும் மரணமடைந்தால், உடனடியாக ஓட்டுநர் காவல்துறைக்கோ அல்லது நீதிபதியையோ சந்தித்து புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News