இந்தியா

நேதாஜியின் பிறந்தநாளை கொண்டாட ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு: மகள் அனிதா போஸ் எதிர்ப்பு

Published On 2023-01-21 17:00 GMT   |   Update On 2023-01-21 17:00 GMT
  • எனது தந்தையின் பாரம்பரியத்தை சுரண்டுவதற்காக அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.
  • அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற நேதாஜியின் கருத்தை பிரதிபலிக்கவில்லை,

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நாளை மறுநாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஆர்எஸ்எஸ் ஏற்பாடுகளை செய்துள்ளது. சாகித் மினார் மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்ற உள்ளார்.

ஆனால் நேதாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஆர்எஸ்எஸ் திட்டத்திற்கு நேதாஜியின் மகள் அனிதா போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ் இதுபற்றி கூறியதாவது:-

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தமும், தேசியவாதத் தலைவரான நேதாஜியின் மதச்சார்பின்மை மற்றும் உள்ளடக்கிய கருத்துக்களும் எதிரெதிர் துருவங்களே தவிர, அவை ஒத்துப்போவதில்லை. என் தந்தையின் பெருமையை சுரண்டுவதற்காக அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.

அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற நேதாஜியின் கருத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரதிபலிக்கவில்லை, நேதாஜி ஒரு பக்தியுள்ள இந்துவாக இருந்தார், ஆனால் மற்ற மதங்களை மதிக்க வேண்டும் என்றார். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்கு அவர் ஆதரவாக இருந்தார்.

இந்த அணுகுமுறையை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. எளிதாக சொல்லவேண்டுமானால் அவர்கள் வலதுசாரிகள், நேதாஜி ஒரு இடதுசாரி.

நேதாஜியை கவுரவிக்க பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், முதலில் அவர்களின் ஆர்வத்தைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். நேதாஜி இன்று உயிருடன் இருந்து, அரசாங்கத்தின் பார்வையில் இருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால், பாஜக அவரைக் கவுரவித்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News