நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேருக்கு மருத்துவ இடம் கிடைத்ததால் அதிர்ச்சி
- நீட் தேர்வில் -40, -25 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
- ஜீரோ பர்சன்டைல் முறையால் நீட் தேர்வின் நோக்கமே சீரழிந்துவிட்டது.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.
நீட் தேர்வில் தேர்ச்சிக்கு 50 பர்சன்டைல் பெற்றாக வேண்டும் என இருந்ததை மாற்றி 0 பர்சன்டைல் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஜீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் கிடைக்கும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 0 மற்றும் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் -40, -25 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி நீட் முதுநிலை தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
தரமான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ஜீரோ பர்சன்டைல் முறையால் நீட் தேர்வின் நோக்கமே சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.