இந்தியா

2024 பாராளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறுவோம்.. பிரதமர் மோடி நம்பிக்கை

Published On 2023-07-18 21:41 IST   |   Update On 2023-07-18 21:41:00 IST
  • தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியும் பெரிய கட்சியோ, சிறிய கட்சியோ இல்லை.
  • என்டிஏ கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும்.

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

தேசத்தை வலுப்படுத்துவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். வளர்ச்சியும் மக்களுக்கு அதிகாரமளிப்பதுமே கூட்டணியின் நோக்கம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நேர்மறையான அரசியலையே நாங்கள் செய்தோம். வெளிநாட்டு சக்திகளின் உதவியை பெறவே இல்லை. எதிர்மறையான சிந்தனையுடன் அமைக்கப்படும் எந்த ஒரு கூட்டணியும் வெற்றி பெறாது.

NDA கூட்டணியில், N என்றால் New India (புதிய இந்தியா), D என்றால் Developed Nation (வளர்ந்த நாடு), A என்றால் Aspirations of people and regions (மக்கள் மற்றும் பிராந்தியங்களின் விருப்பங்கள்)

என்டிஏ கூட்டணியானது கட்டாயத்தின்பேரில் அமைந்த கூட்டணி அல்ல, பங்களிப்புடன் கூடிய கூட்டணி. இங்குள்ள அனைத்து கட்சிகளும் பங்களிப்பை வழங்குகின்றன, அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியும் பெரிய கட்சியோ, சிறிய கட்சியோ இல்லை, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்தது.

தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது, எதிர்க்கட்சிகளோ அவர்களை பிரிக்கின்றன. நாங்கள் நிகழ்காலத்திற்காக மட்டும் உழைக்காமல், எதிர்காலத்தையும் சிறப்பாக்க பாடுபடுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதலில் நாடு, நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், மக்களுக்கு அதிகாரம். அதன்பிறகுதான் அரசியல்

2024 பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறும். மேலும் அனைத்து கட்சிகளும் வளர்ச்சியை எடுத்துச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். நாம் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News