இந்தியா

நவீன் பட்நாயக் 6-வது முறையாக தேர்தலில் போட்டி

Published On 2024-03-28 09:53 GMT   |   Update On 2024-03-28 09:53 GMT
  • ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
  • சம்பல்பூர் பாராளுமன்ற தொகுதியில் தர்மேந்திர பிரதானை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் பிரணாப் பிரகாஷ்தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. ஒடிசாவில் 21 பாராளுமன்ற தொகுதிகளும், 147 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இங்கு மே மாதம் 13-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 4 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

ஒடிசா மாநிலத்தை பொறுத்தவரை அம்மாநில முதல்-மந்திரியும், பிஜூ ஜனதாதள கட்சி தலைவருமான நவீன்பட்நாயக் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். தொடர்ந்து 5-வது முறையாக அவர் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.

இந்த தேர்தலில் பிஜூ ஜனதாதளமும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் இரு கட்சிகள் இடையே உடன்பாடு எதுவும் ஏற்படாததால் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என அம்மாநில தலைவர் அறிவித்தார்.

இதையடுத்து அம்மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வரும் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் 15 பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் மற்றும் 72 சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

இதில் நவீன்பட்நாயக் தொடர்ந்து 6-வது முறையாக ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே இவர் 5 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ச்சியாக 5-வது தடவையாக முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். நீண்ட நாள் முதல்-மந்திரியாக இருந்து வருபவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

தற்போது மீண்டும் அவர் ஹிஞ்சிலி தொகுதியில் களம் இறங்கி இருக்கிறார்.

இக்கட்சி சார்பில் கட்டாக் தொகுதியில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் முன்னாள் மனிதவள தலைவராக இருந்த சாண்ட்ரூப் மிஸ்ரா போட்டியிடுகிறார். விருப்ப ஓய்வு பெற்ற அவர் பிஜூ ஜனதாதள கட்சியில் இணைந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

சம்பல்பூர் பாராளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் பிரணாப் பிரகாஷ்தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 3 முறை எம்.எல்.ஏவாகவும், மந்திரியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் பூரி தொகுதியிலும், காங்கிரஸ் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் ரவுத்ரே மகன் மன்மத் ரவுத்ரே புவனேஸ்வர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

Tags:    

Similar News